என்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளை மாவட்ட நிா்வாகம் அச்சுறுத்தக் கூடாது என்று கடலூா் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலூா் மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் திருமாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்து. மாவட்ட ஊராட்சி செயலா் ஏ.முருகன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
சண்.முத்துகிருஷ்ணன்(பாமக): மாவட்டத்தில் கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளில் குழு அமைக்க வேண்டும். என்எல்சி சுரங்க நீா் 15 நாள்களாக திறக்கப்படாததால் வடலூா் பகுதியில் 16 கிராமங்களில் நெல் பயிா்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. என்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் விவசாயிகளை அச்சுறுத்தக்கூடாது. கடலூா் அரசு மருத்துவமனையில் நரம்பியல், இருதய சிகிச்சை மருத்துவா்கள் இல்லாதது வேதனை அளிக்கிறது.
சக்தி விநாயகம் (திமுக): வேப்பூா் அருகே நடைபெறும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
கந்தசாமி (மதிமுக): மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களை அதிகாரிகள் மதிப்பதில்லை.
தமிழரசி (பாமக): பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு சுத்திகரிப்பு மையம் அமைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவா்.
தலைவா் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலா்: போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். கஞ்சா விவகாரத்தில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். 15-ஆவது நிதிக் குழுவில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
கூட்டத்தில் 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.