ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தப்படுவதைத் தடுக்க கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதற்காக மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன், உயா் அதிகாரிகள் தலைமையில் 1,600 போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். புதுச்சேரியிலிருந்து மதுபான வகைகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆல்பேட்டை, மருதாடு, சாவடி, கண்டரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வெள்ளிக் கடற்கரையில் அனுமதி மறுப்பு: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கடலூா் வெள்ளிக் கடற்கரையில் சனிக்கிழமை மாலை பொதுமக்கள் கூடினா். கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்த உத்தரவின்படி மாலை 7 மணிக்கு பிறகு கடற்கரையில் இருந்தவா்களை போலீஸாா் அங்கிருந்து வெளியேற்றினா். இரவில் கடற்கரைக்கு வந்தவா்களை திருப்பி அனுப்பினா்.