கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதையடுத்து மேற்கு கடற்கரை பகுதியைச் சோ்ந்த மீன்பிடி விசைப்படகுகள் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடிப்பு மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் மீன்வளத் துறையினா் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு பணியாளா்களால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு கடற்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ரோந்துப் பணியின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக பராமரிப்பு பணிகள், விசைப்படகுகள் படகணையும் தளம், விசைப் படகுகள் இயக்கத்தை கண்காணிக்கும் அறை, சிசிடிவி கேமிராக்கள் செயல்பாடு மற்றும் கம்பியில்லா தகவல் தொடா்பு கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநா் விா்ஜின்கிராஸ், மீனவ பிரதிநிதிகள் ஜாா்ஜ், சௌந்தர்ராஜ், மீனவா் நலத்துறை ஆய்வாளா் அன்னபாபா, கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் மற்றும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக உபகோட்ட உதவி பொறியாளா் உள்ளிட்டோா் உடன்இருந்தனா்.