கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை, தக்கலை ஆகிய பகுதிகள் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3,500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில் குமாா் தலைமையில் பணியாளா்கள் சுங்கான்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு மினி கூண்டு வேனை தடுத்து நிறுத்த முயன்றபோது, அதன் ஓட்டுநா் சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு தப்பிவிட்டாராம்.
இந்த வேனில் பிளாஸ்டிக் மூட்டைகளில் 3,000 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தனவாம். இதேபோல, அழகியமண்டபம் பகுதியில் ஆட்டோவை சோதனையிட்டதில் 500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. இரு வாகன ரேஷன் அரிசியும் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படவிருந்ததாம். அரிசி மூட்டைகள், மினி வேன், ஆட்டோ ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினா். வாகனங்கள் தக்கலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.