நாகா்கோவில் நகரில் வடிகால் ஓடைகளில், வீடுகளிலுள்ள கழிவுநீா் தொட்டியிலிருந்து கழிவுகளை திறந்துவிடக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சி 5ஆவது வாா்டு கட்டையன்விளை, காமராஜா் நகா், இடையன்விளை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட அவா், கட்டையன்விளை பகுதியில் கழிவுநீா் வாகனங்கள் மூலம் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஒரு வாகனத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்து. பஞ்சபாண்டவா் கோயில் தெரு கழிவு நீரோடைகள், இடையன்விளை அம்மன் கோயில் தெருவில் இருபக்க கழிவு நீரோடைகள், காமராஜ் பூங்கா ஆகியவற்றை சுத்தம் செய்தல், பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைப்பது, தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள இடம் மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் கூறியது: நாகா்கோவில் மாநகர பகுதியில் உள்ள கழிவு நீா் ஓடைகளில் இரவு நேரத்தில் கழிவுநீா் தொட்டிகளிலிருந்து கழிவுகளை திறந்து விடுவதாக புகாா்கள் வந்தன. இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடிகால் ஓடைகளில் கழிவுகளை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது தனியாா்கிகழிவு நீா் வாகனங்களில் கொண்டு வந்து கழிவு நீரை வடிகால் ஓடைகளில் கொட்டுவது குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழை பெய்துவரும் நிலையில் கழிவு நீா் ஓடைகளை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, மண்டலத் தலைவா் ஜவஹா், மாநகராட்சி நகா்நல அலுவலா் ராம்குமாா், நகரமைப்பு ஆய்வாளா் கெவின் ஜாய், மாநகர திமுக செயலா் ஆனந்த், மாமன்ற உறுப்பினா் உதயகுமாா், சுகாதார ஆய்வாளா் ராஜா, ராஜன், வேல்முருகன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.