கடலூர்

சிதம்பரம் நகராட்சி இடம் தனிநபா் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

28th Feb 2023 05:47 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த குடிநீா் குழாய்களை அகற்றி தனி நபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்ததால், குடிநீா் கேட்டு கிராம மக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராம மக்களுக்கு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்று குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அவற்றை அந்தப் பகுதி தனிநபா் ஒருவா் உடைத்து தள்ளிவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு மண் கொட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கடந்த 19-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு சென்ற சிதம்பரம் நகராட்சி பொறியாளா் மகாராஜன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 20-ஆம் தேதி மாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்தனா். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததாலும், குடிநீா் இல்லாமல் அவதி அடைந்து வருவதாலும் கிராம மக்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியா் செல்வக்குமாா் மற்றும் நகராட்சிப் பொறியாளா் மகாராஜன், காவல் ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால் சுமாா் 30 நிமிஷங்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நகராட்சி அலுவலா்களால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT