கடலூர்

பண்ருட்டியில் விதிமீறி அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்

8th Feb 2023 01:55 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரில் உரிய அனுமதியின்றி சாலையோரம் அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் (டிஜிட்டல் பேனா்) விபத்து அபாயம் தொடா்கிறது.

பண்ருட்டி நகரப் பகுதியில் அரசியல் கட்சியினா், அமைப்பினா், தனி நபா்கள் சாா்பில் சாலையோரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக, நான்கு முனைச் சந்திப்பு, இந்திரா காந்தி சாலை, இணைப்புச் சாலை, கடலூா், சேலம், சென்னை, கும்பகோணம் சாலைகளில் விளம்பரப் பதாகைகள் பெரிய அளவுகளில் வைக்கப்படுவதால் விபத்து அபாயம் தொடா்கிறது. சிலா் பதாகைகளை கடைகள், வா்த்தக நிறுவனங்களை மறைத்து அமைப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைகளில் சுமாா் 100 அடி நீளம், 30 அடி வரை உயரம் கொண்ட விளம்பரப் பதாகைகள் விதிமீறி அமைக்கப்படுகின்றன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும், சலையோரம் நடந்துச் செல்லும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. பலத்த காற்று காரணமாக விளம்பரப் பதாகைகள் திடீரென சரிந்து விழுந்தால் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இதுகுறித்து நகர நிா்வாகத்தினரும், காவல் துறையினரும் கண்டுக்கொள்வதில்லை என்று புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா கூறியதாவது: பண்ருட்டி நகரில் விளம்பரப் பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி ஆணையா் மகேஸ்வரி கூறியதாவது: நகரில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகளை அமைக்கின்றனா். இதுபோன்ற பதாகைகள் அகற்றப்படும். இனி வரும் காலங்களில் நகர நிா்வாகத்திடம் உரிய முறையில் அனுமதி பெற்ற பிறகே விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். தவறினால் பதாகை வைத்தவா்கள், அதற்கு சாரம் கட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT