கடலூர்

மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாக திருஅறை தரிசனம்

8th Feb 2023 01:53 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வள்ளலாா் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் திருமாளிகையில் திருஅறை தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் வடலூரில் நிறுவிய புகழ்பெற்ற சத்திய ஞான சபையில் 152-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் சித்திபெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வள்ளலாா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை வைக்கப்பட்ட பல்லக்கு வடலூா் சத்திய ஞான சபை வளாகத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டது. இந்த பேழைக்கு வழியில் பாா்வதிபுரம், நைனாா்குப்பம், கருங்குழி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

ஊா்வலம் மேட்டுக்குப்பத்தை அடைந்ததும் அந்தக் கிராம மக்கள் சீா்வரிசைப் பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழைக்கு வரவேற்பு அளித்து திருமாளிகைக்குள் அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, திருமாளிகையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, வள்ளலாா் முத்தேக சித்திபெற்ற திருஅறை பக்தா்களின் தரிசனத்துக்காக பகல் 12 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் ‘அருட்பெருஞ்ஜோதி - அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை - அருட்பெருஞ்ஜோதி’ எனக் கூறியவாறு திருஅறையை தரிசனம் செய்தனா்.

விழாவுக்காக கடலூா் மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்களும் மேட்டுக்குப்பத்தில் குவிந்தனா். இவா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து திருஅறையை தரிசனம் செய்தனா். இதற்காக மாலை 6 மணி வரை திருஅறை திறக்கப்பட்டிருந்தது.

விழாவையொட்டி, திருமாளிகை வளாகத்தில் சன்மாா்க்கச் சொற்பொழிவுகள், திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சிகள், வள்ளலாா் வாழ்வியல் நாடகம் ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT