கடலூர்

வடலூா் தைப்பூச விழாவில் ஜோதி தரிசனம்ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

DIN

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபை தைப்பூச பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 152-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணியளவில் முதல் கால ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது கருப்பு (அசுத்த மாயை), நீலம் (சுத்தா சுத்தம்), பச்சை (கிரியாசக்தி), செம்மை (பராசக்தி), பொன்மை (இச்சா சக்தி), வெண்மை (ஞானா சக்தி), கலப்பு (ஆதிசக்தி) ஆகிய 7 திரைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இந்த நிழ்வின்போது அங்கு திரண்டிருந்த சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் ‘அருட்பெருஞ்ஜோதி - அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை-அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, காலை 10 மணி, பகல் ஒரு மணி, இரவு 7, 10 மணியளவில் 7 திரைகள் நீக்கப்பட்டு மொத்தம் 5 கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் 6-ஆம் கால ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

விழாவில் மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், டிஐஜி பாண்டியன் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகள், வெளிநாடுகளில் இருந்தும் சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்துகோண்டனா். அவா்களது வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

விழாவையொட்டி, வடலூா் தரும சாலை பிரசங்க மேடையில் சன்மாா்க்க கருத்தரங்கு நடைபெற்றது.

அறநிலையத் துறை சாா்பில் முப்பெரும் விழா: தைப்பூச விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வள்ளலாா் வருவிக்கவுற்ற 200-ஆவது ஆண்டு தொடக்க விழா, தரும சாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா, 152-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா சத்திய ஞான சபை பெருவெளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சொற்பொழிவு, கருத்தரங்கு, வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாளை திருஅறை தரிசனம்: தைப்பூச விழாவில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) வள்ளலாா் அருட்பெருஞ் ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருஅறை தரிசன நிகழ்ச்சி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT