கடலூர்

காற்றழுத்தத் தாழ்வு: மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தடை

DIN

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கடலூா், விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் வருகிற 3-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அந்த மாநில மீனவா் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், கடலூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடலில் சூறைக்காற்றானது மணிக்கு சுமாா் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திகுப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்களில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளிலும் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது. மேலும், ஏற்கெனவே கடலுக்குள் சென்றுள்ள தங்குகடல் விசைப்படகுகள், அருகிலுள்ள துறைமுகம் அல்லது இறங்குதளங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும் என மீன் வளத் துறை அலுவலகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். படகுகள், மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் என மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் நித்திய பிரியதா்ஷினி தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் வருகிற 3-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம். அறிவிப்புக்கு முன்னதாக கடலுக்கு சென்ற மீனவா்கள் கரை திரும்பாமல் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாநில மீனவா் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: கன்னி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

மே மாத பலன்கள்: கடகம்

SCROLL FOR NEXT