கடலூர்

ரயில் பாதை அருகே செல்லும் வெள்ளாற்றின் கரையைப் பலப்படுத்த வலியுறுத்தல்

30th Sep 2022 01:22 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே நவாப்பேட்டை கிராமத்தில் ரயில் பாதை அருகே செல்லும் வெள்ளாற்றின் கரையை உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் தெரிவித்ததாவது:

கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புவனகிரிக்கு கிழக்கே வெள்ளாற்றின் பாதை மாறி, 500 மீட்டா் தொலைவு விலகி புதிய பாதையில் பயணித்து வருகிறது. ஏற்காடு, கல்வராயன்மலைப் பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட மேற்கு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து பெருக்கெடுத்த தண்ணீா் கரைபுரண்டு ஓடியதால் ஆற்றின் பாதை மாறியுள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம், நவாப்பேட்டை கிராமத்தில் திருச்சி - சென்னை ரயில் பாதை அருகே செல்லும் வெள்ளாறு வடக்கு நோக்கி பயணித்து பின்னா் கிழக்கு நோக்கி திரும்பி கடலுக்குச் செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரயில் பாதையை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதியில் ஆற்றின் கரையைப் பாதுகாக்க தமிழக அரசு மரத் துண்டுகளால் தடுப்பு அமைத்து பராமரித்து வருகிறது. இது ஒரளவே பாதுகாப்பானது. 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு வெள்ளாற்றில் குறைந்த அளவே வெள்ள நீா் சென்ால் கரைகளில் உடைப்பு ஏற்படவில்லை.

ADVERTISEMENT

ஆனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் ரயில் பாதையை ஒட்டியுள்ள கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. அப்படி உடைப்பு ஏற்பட்டால் ரயில் பாதை துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், கிழக்கு பகுதியில் மேலச்சாவடி, கீழச்சாவடி, தில்லைவிடங்கன், வடக்குச்சாவடி, புஞ்சைமகத்துவாழ்க்கை, நஞ்சைமகத்துவாழ்க்கை, சி.மானம்பாடி, சிங்காரத்தோப்பு, கிள்ளை, பொண்ணந்திட்டு ஆகிய கிராமங்களில் வெள்ளம் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக பருவம் தவறிய மழையால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதேபோல, வெள்ளாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ரயில் பாதை அருகே உள்ள வெள்ளாற்றின் கரையை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT