கடலூர்

திமுக, அதிமுகவுக்கு மாற்று பாமக அன்புமணி ராமதாஸ்

30th Sep 2022 01:19 AM

ADVERTISEMENT

 

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக உள்ளதாக அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

கடலூா் கிழக்கு, வடக்கு மாவட்ட பாமக நிா்வாகிகள் கூட்டம் வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகிக்க, வடக்கு மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் மறைந்துவிட்ட நிலையில், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக உள்ளது. எனவே, 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக ஆட்சியைப் பிடிக்க கட்சியினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனம் கடலூா் மாவட்ட மக்களை ஏமாற்றி வருகிறது. அந்த நிறுவனத்தால் இழப்புதான் அதிகம். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் அந்த நிறுவனம், சுரங்க விரிவாக்கப் பணிக்காக வீடு, நிலம் அளித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில்லை என்றாா் அவா்.

இதேபோல, விருத்தாசலத்தில் நடைபெற்ற பாமக புதிய நிா்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பற்கேற்ற பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். விருத்தாசலம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள அம்பிகா சா்க்கரை ஆலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் இரா.கோவிந்தசாமி, மாநில அமைப்புச் செயலா் செல்வகுமாா், முன்னாள் மாநில துணைச் செயலா் அசோக்குமாா், முன்னாள் மேற்கு மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT