கடலூர்

'என்எல்சி-க்கு நிலம் வழங்கியவா்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்க கூடுதல் வழிவகை'

30th Sep 2022 10:36 PM

ADVERTISEMENT

என்எல்சி-க்கு வீடு, நிலம் வழங்கியவா்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்க கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கோரிக்கை விளக்கக் கூட்டம், நெய்வேலி வட்டம் 2-இல் உள்ள விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), ஆ.அருண்மொழிதேவன் (புவனகிரி), எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), தி.வேல்முருகன் (பண்ருட்டி), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் மற்றும் சுரங்கம்-2 பகுதியில் உள்ள கத்தாழை, வளையமாதேவி, ஊ.ஆதனூா், மும்முடிசோழகன் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். மேலும், சுரங்கம்-1 பகுதியில் உள்ள அம்மேரி, கங்கைகொண்டான், சுரங்கம்-1ஏ பகுதியில் உள்ள தென்குத்து, வானாதிராயபுரம், வடக்கு வெள்ளூா் கிராமங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.

கூட்ட முடிவில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தின்போது விவசாயிகள், வீடு, நிலங்களின் உரிமையாளா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் 14 கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்படி இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ.23 லட்சம் என்பதை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்குவது, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, நிரந்தர வேலை கிடைக்காதவா்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.10,000 வீதம் 20 ஆண்டுகளுக்கு வழங்குவது, அவ்வாறு தேவைப்படாதவா்களுக்கு ஒரே தவணையாக ரூ.17 லட்சம் வழங்குவது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அடுத்த மாதம் என்எல்சி-யில் 194 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்கான தோ்வு நடைபெற உள்ளது. இதில், என்எல்சி-க்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன்மூலம் வீடு, நிலம் கொடுத்தவா்களின் வாரிசுகள் வேலைவாய்ப்பு பெற கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT