கடலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி மதுரை இளைஞா் கைது

30th Sep 2022 10:37 PM

ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சம் பணம் மோசடி செய்தது தொடா்பாக மதுரை மாவட்ட இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

கடலூா் வட்டம், கிளிஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வாசு (49). இவருக்கு முகநூல் மூலம் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த செந்தமிழ்பாண்டியன் (33) அறிமுகமானாா். இவா், மதுரையைச் சோ்ந்த பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும், தனக்கு ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் கடவுச் சீட்டுடன் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாராம். இதனை நம்பிய வாசு, தனக்கு சிங்கப்பூா் நாட்டில் வேலை வாங்கித் தருமாறு கூறினாராம். இதற்கான பணத்தை தனது நண்பா் பாரதிராஜாவின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு வாசுவிடம் செந்தமிழ்பாண்டியன் கூறினாராம்.

இதன்படி வாசு 22.12.2021 அன்று பாரதிராஜாவின் வங்கிக் கணக்கில் ரூ.ஒரு லட்சம் செலுத்தினாராம். ஆனால், அதன்பிறகும் செந்தமிழ்பாண்டியன் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனிடம் வாசு புகாா் அளித்தாா். அதன்பேரில் சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளா் சீனிவாசலு மேற்பாா்வையில் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மதுரை மேலூா் கே.கே.நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் பாண்டியன் என்ற செந்தமிழ்பாண்டியன், பாரதிராஜா ஆகியோா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மதுரை மாவட்டத்துக்குச் சென்று செந்தமிழ்பாண்டியனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 45 போலி பாஸ்போா்ட்டுகள், கணினியை பறிமுதல் செய்தனா். தலைமறைவான பாரதிராஜாவை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT