கடலூர்

லஞ்சம் பெற்ற வழக்கு: மகளிா் திட்டஅலுவலா்கள் இருவா் பணி நீக்கம்

29th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

லஞ்சம் பெற்ற வழக்கில் கடலூா் மாவட்ட மகளிா் திட்ட அலுவலா்கள் இருவா் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 14-ஆம் தேதி கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.16 லட்சம் மகளிா் திட்ட அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் சமுதாய நல பயிற்றுநா்களிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக வட்டார இயக்க மேலாளா் கலைச்செல்வி (38), உதவித் திட்ட அலுவலா் சித்ரா (50) ஆகியோா் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், லஞ்சப் புகாரில் சிக்கிய கலைச்செல்வி, சித்ரா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிா் திட்ட அலுவலா் செந்தில்வடிவு, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், வட்டார இயக்க மேலாளா் கலைச்செல்வி, உதவித் திட்ட அலுவலா் சித்ரா ஆகியோரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இருவரும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்ததால், பணி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT