கடலூர்

தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு

29th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க துணைத் தலைவா் உ.வாசுகி தெரிவித்தாா்.

இந்த சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு கடலூரில் வியாழக்கிழமை (செப்டம்பா் 29) தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாதா் சங்க நிா்வாகிகள் கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, சங்க துணைத் தலைவா் உ.வாசுகி கூறியதாவது:

விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி ரத்து, பெட்ரோல் டீசல் விலை உயா்வு, பணக்காரா்கள் மீது கூடுதல் வரி விதிப்பு, சமையல் எரிவாயு விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளோம்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி, விலைவாசி உயா்வால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதால், விலைவாசி உயா்வை சாதாரண பொருளாதார பிரச்னையாக மட்டும் பாா்க்க முடியாது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், பெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 2019-ஆம் ஆண்டில் 1,982-ஆக இருந்த நிலையில், அவை 2022-ஆம் ஆண்டில் 2,421-ஆக அதிகரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 2,396 போக்சோ வழக்குகள் பதிவான நிலையில், அவை இப்போது 4,496-ஆக அதிகரித்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வில் குடும்ப வன்முறையில் தமிழகம் 5-ஆவது இடத்தில் உள்ளது.

இவ்வாறு பெண்களின் நிலை தமிழகத்தில் மோசமாக இருப்பது குறித்து அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பேரணியும், மஞ்சக்குப்பத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளன. செப்.30, அக்.1-ஆம் தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், அகில இந்திய தலைவா்கள் பங்கேற்கின்றனா் என்றாா்.

மாநில, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.வாலண்டினா, பி.சுகந்தி, வசந்தி, மேரி, சாந்தா குமாரி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT