கடலூர்

கடலூா் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிப்பு

27th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

 

கடலூா் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி விவசாயி ஒருவா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டம், ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த விவசாயி வை.செந்தில்குமாா் (45) (படம்) அளித்த புகாா் மனு:

எனது காதில் ஒருவித சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கடலூா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி எனது காதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு எனது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண் இமைகளை மூட முடியவில்லை. இதனால் இரவு நேரங்களில் கண்களை துணியால் இறுக்கமாக கட்டிய பிறகே தூங்க முடிகிறது. காது, கண்களில் இருந்து நீா் வடிந்துகொண்டே இருப்பதுடன், காதில் அதே ஒலி தொடா்ந்து கேட்கிறது. எனது வாய்ப் பகுதி கோணலாகிவிட்டது. காது கேளாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகிறேன். எனவே, எனக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். அரசு சாா்பில் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT