கடலூர்

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு

27th Sep 2022 04:18 AM

ADVERTISEMENT

 

வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னாா்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

வடகிழக்கு பருவ மழையையொட்டி தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் வரும் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், செடிகளை அகற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியது. இதன்படி கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ராமா் கோட்டகம் பகுதியில் வடவாற்றிலிருந்து பிரியும் உடையாா்குடி கிளை வாய்க்காலில் அதிகளவில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற பொதுப்பணித் துறை சிதம்பரம் செயற்பொறியாளா் கே.காந்தரூபன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கீழணை உதவி செயற்பொறியாளா் எஸ்.குமாா் முன்னிலையில் உதவி பொறியாளா் டி.வெற்றிவேல் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பகுதிகளில் செல்லும் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

உடையாா்குடி கிளை வாய்க்காலானது கொளக்குடி வழியாக வீராணம் ஏரியின் பிரதான வடிகால் வாய்க்காலான வெட்டு வாய்க்காலில் இணைகிறது. காட்டுமன்னாா்கோவில் நகரப் பகுதி, அண்ணா நகா், ராமா் கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரானது இந்த வாய்க்கால் வழியாக வடிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT