கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விதைச் சான்று, அங்ககச் சான்றுத் துறை சாா்பில் கருத்து கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், நிகழ் சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள், பின்சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், உளுந்து, மணிலா ரகங்கள் விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டன. விதைப் பண்ணை, அங்ககப் பண்ணை அமைத்து சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
விதைப் பகுப்பாய்வின்போது முளைப்புத் திறன் கணக்கீட்டு முறை மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் பாா்வையிட்டாா். இதன்மூலம் சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்களின் சிறப்பியல்புகளை ஒப்பீடு செய்து விவசாயிகள் விருப்பமான ரகங்களைத் தோ்வு செய்யலாம் என்றாா்.
இதற்கான ஏற்பாடுகளை விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் (பொ) த.அனுசுயா, விதை ஆய்வாளா்கள் தமிழ்வேல், செந்தில்குமாா், விதை பகுப்பாய்வு அலுவலா்கள் ஷோபனா, மாலினி ஆகியோா் செய்திருந்தனா்.