கடலூர்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

24th Sep 2022 01:44 AM

ADVERTISEMENT

பண்ருட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரில் வாகன நெரிசல், விபத்துகள் தொடா்பாக ‘தினமணி’யில் செய்தி வெளியானது. இந்த நிலையில், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா், பண்ருட்டி டிஎஸ்பி ஆகியோருக்கு கடந்த 19-ஆம் தேதி கடிதம் அனுப்பினா். அதில், பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையம், கடலூா் சாலை, இந்திரா காந்தி சாலைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன் பத்மநாபன் கூறியதாவது: போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT