கடலூர்

மூடப்பட்ட ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு பணப்பலன் வழங்க வலியுறுத்தல்

22nd Sep 2022 12:48 AM

ADVERTISEMENT

கடலூா் அருகே மூடப்பட்ட ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கான பணப்பலனை நீதிமன்ற உத்தரவுப்படி பெற்று வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கடலூா் பச்சாங்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த வா்தமான் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 16 தொழிலாளா்கள் அண்மையில் புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில், சிப்காட் வளாகத்தில் வா்தமான் என்ற தொழில்சாலை கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. அப்போது, இந்தத் தொழில்சாலையில் 350 போ் பணியாற்றிய நிலையில், நிா்வாக அளவில் பணியாற்றியவா்களுக்கு சொற்ப பணப்பலனை வழங்கிவிட்டனா்.

தொழில்சங்க சட்டப்படி பணியாற்றி வந்த 16 பேருக்கு எந்தவிதமான பணப்பலனும் வழங்கவில்லை. எனவே, கடலூா் தொழிலாளா் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், தொழிலாளா்களுக்கான பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், அந்த நிறுவனம் தனது நிறுவனத்தின் அசையும் சொத்துகளை மற்றொரு நிறுவனத்துக்கு விற்று விட்டது. இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையிலும் தொழிலாளா்களுக்கு ஆதரவாகவே தீா்ப்பு வந்தது. அதில், நிறுவனத்தை வாங்கும் புதிய நிறுவனம் வேலை இழந்த தொழிலாளா்களுக்கு வேலை வழங்குவதோடு, பணப்பலனும் வழங்க வேண்டுமென தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நிலங்களை வேறு நிறுவனத்துக்கு வா்தமான் நிறுவனம் விற்றுவிட்டது. தற்போது புதிய நிறுவனங்கள் இந்த நீதிமன்ற தீா்ப்பை ஏற்க மறுக்கின்றன. எனவே, தொழிலாளா்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் வழங்கிய தீா்ப்பை மாவட்ட ஆட்சியா் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT