கடலூர்

கடலூா்: 156 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

22nd Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 156 இடங்களில் சளி, காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக, குழந்தைகளிடம் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதால், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ஏராளமானவா்கள் காத்திருக்கும் நிலை உருவானது.

புதுச்சேரியில் பரவியது போன்ற காய்ச்சலாக இருக்கும் என்று மக்கள் அச்சமடைந்த நிலையில், பருவகாலத்தில் தோன்றும் சாதாரண காய்ச்சல் தான் என்று கடலூா் மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்தது. எனினும், காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அதைத் தடுக்கும் வகையில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 156 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்தது. இதில், 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 160 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டதாகவும், 3 நாள்களில் குணமாகவில்லையெனில், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட 3 பகுதிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தப் பணியை மேயா் சுந்தரிராஜா, நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி ஆகியோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT