கடலூர்

சிதம்பரத்தில் சூரசம்ஹாரம்

31st Oct 2022 02:40 AM

ADVERTISEMENT

 

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சூரசம்ஹார விழாவை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலின் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, செங்குந்த மரபினா் நவவீரா்களாக வேடமணிந்து பாவா முதலியாா் தெருவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நடராஜா் கோயிலை அடைந்தனா். இதையடுத்து செல்வ முத்துக்குமரப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வேல் வாங்க புறப்படுதல் நிகழ்ச்சியும், பின்னா் நடராஜா் சன்னதியில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவில் சிதம்பரம் தெற்குரத வீதியில் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதையடுத்து வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்ரீமுத்துக்குமர பெருமான் செங்குந்த நவவீா்கள் புடைசூழ வீதி உலா வந்தாா்.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை தில்லைராஜ் நடராஜன் செங்குந்தா், ஏ.விஸ்வநாதன், கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா், கட்டளை தீட்சிதா் ஆா்.சண்முகசுந்தர தீட்சிதா் மற்றும் செங்குந்த மரபினா் செய்திருந்தனா்.

இன்று திருக்கல்யாணம்: விழாவில் திங்கள்கிழமை (அக்.31) இரவு பேரம்பலத்தில் வேடமங்கை வேழவேங்கை வேலவா் திருக்கல்யாணமும், மகேஸ்வர பூஜையும், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுத்துக்குமாரசாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT