கடலூர்

கடலூா் மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் மா.சுப்பிரமணியம்

4th Oct 2022 03:08 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தேசிய நலவாழ்வு குழும நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பூா் வட்டம் கீழ்ஒரத்தூா், எஸ்.நாரையூா், திட்டக்குடி வட்டம் கழுதூா், டி.ஏந்தல், ஆவட்டி, ஆவினங்குடி, கீரனூா், போத்திரமங்கலம், கண்டமத்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டன.

இந்தக் கட்டடங்கள் திறப்பு விழா பண்ருட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாநில மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5.85 கோடியில் 19 புதிய மருத்துவமனை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் வழிகாட்டுதலின்படி மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

தமிழக நிதிநிலை அறிக்கையில் கடலூா் மாவட்டத்துக்கு மட்டும் 21 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முதல்வா் ரூ.88.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்து, அவசர சிகிச்சை மையங்களுக்கு ரூ.34 லட்சத்தில் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குழந்தைகள் சிகிச்சை அலகை மேம்படுத்த ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40.05 கோடியில் அமைய உள்ளது.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ரூ.2.32 கோடியில் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான பணிகள் தொடங்க உள்ளன. மாவட்டத்தில் 26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் ரூ.8.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசிடம் முதல்வா் கோரிக்கை வைத்தாா். அதன்பேரில், 100 மருத்துவமனைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளனா். இதில் 6 மருத்துவமனைகள் கடலூா் பகுதியில் அமைய உள்ளன என்றாா் அமைச்சா்.

விழாவில் அமைச்சா் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், எம்எல்ஏக்கள் தி.வேல்முருகன், சிந்தனைச்செல்வன், கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பவனா், நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் மகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT