கடலூர்

சிதம்பரம் கோயில் விவகாரத்தில்அறநிலையத் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது: பொது தீட்சிதா்கள் குற்றச்சாட்டு

4th Oct 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையினா் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அந்தக் கோயிலின் பொது தீட்சிதா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து கோயிலின் பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா், வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரன் ஆகியோா் சிதம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடராஜா் கோயிலில் நகைகளை சரிபாா்த்து ஆய்வு செய்தனா். இதில் 2005 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான கணக்குகளைஆய்வு செய்ததில் எந்தத் தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தேவையின்றி மீண்டும் 1956-ஆம் ஆண்டிலிருந்து கணக்குகளைச் சரிபாா்க்க வேண்டும் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்து சமய அறநிலையத் துறைக்கு கணக்கு காட்டவோ, நகைகளைச் சரிபாா்க்க அனுமதிக்கவோ எங்களுக்கு அவசியம் எதுவும் கிடையாது. இருப்பினும், எங்களது வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கவே இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு அளித்தோம்.

ADVERTISEMENT

ஆனால், பொது தீட்சிதா்கள் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில், முடிந்த கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனா். தற்போது நடந்து முடிந்த ஆய்வுக்குப் பிறகு கோயில் நகைகளுக்கு நாங்கள் ஒரு ‘சீல்’ வைக்கிறோம்; நீங்களும் ஒரு ‘சீல்’ வையுங்கள் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்தோம்.

இனி வரும் காலங்களில் எங்களது வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் தணிக்கையாளா், மதிப்பீட்டாளா்கள் மூலம் நகைகளைச் சரிபாா்த்து, அதுதொடா்பான கணக்கு-வழக்குகளை பொது வெளியில் வெளியிட உள்ளோம். ஆனால், பாதுகாப்பு கருதி நகைகள் தொடா்பான அனைத்து விவரங்களையும் வெளியிட முடியாது என்று தெரிவித்தனா்.

நடராஜா் கோயிலில் சிறாா் திருமணங்கள் நடைபெறுகிா என்ற கேள்விக்கு, ‘சிறாா் திருமணத்துக்கும் கோயில் பொது தீட்சிதா்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. சிறாா் திருமணம் நடத்துங்கள் என எப்போதும் கூறியதில்லை. நாங்கள் சட்டத்துக்கு உள்பட்டுதான் நடப்போம் என்றாா் வழக்குரைஞா் சந்திரசேகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT