கடலூர்

கடலூரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்!

2nd Oct 2022 01:22 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

கடலூரில் சாலையோர மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் கடலூா்-விருத்தாசலம்-சேலம் நான்கு வழிச் சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் சாலை, சென்னை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி தொழில்வடச் சாலைக்கான இணைப்புச் சாலை ஆகிய பணிகள் பெரிய அளவிலும், ஆங்காங்கே மாநில, மாவட்ட சாலைகள் விரிவாக்கமும் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே கேட்டபோது, வெட்டப்படும் மரங்களுக்கு நிகரான எண்ணிக்கையில் மரக் கன்றுகள் நடப்படும் என்று கூறினாா். ஆனால், அதன்படி மரக் கன்றுகள் நடப்பட்டதாக தெரியவில்லை.

ADVERTISEMENT

பசுமைத் தமிழகம் என்ற இயக்கத்தை தமிழக முதல்வா் கடந்த செப்.24-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். கடலூா் மாவட்டத்தில் இந்த இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்ததுடன், மாவட்டம் முழுவதும் 4.33 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று அறிவித்தாா். ஆனால், அதே நாளில் கடலூா் மஞ்சக்குப்பம் முதல் ரெட்டிச்சாவடி வரையிலான பகுதிகளில் சாலையோர மரங்களை வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மஞ்சக்குப்பம் முதல் ஆல்பேட்டை வரையிலான பகுதிகளில் மிகவும் பழைமையான வேம்பு, புளிய மரங்கள் வெட்டப்பட்டு, வாகனங்களில் ஏற்றப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: மரங்களை வெட்டும் பணியில் எந்தத் துறையினா் ஈடுபடுகின்றனா்? யாருடைய கண்காணிப்பில் இந்தப் பணி நடைபெறுகிறது என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மதிப்புமிக்க மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது. இதுபோன்ற பணிகளின்போது உரிய துறை அலுவலா்களின் கண்காணிப்பு அவசியம் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT