கடலூர்

புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

30th Nov 2022 03:01 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சாமிபிள்ளைத் தோப்பில் புதிதாக மதுக் கடை திறக்கப்படவுள்ளது. இந்தக் கடை அமையும் பகுதியில் கருவடிக்குப்பம் சித்தானந்தா் கோயில் உள்ளது. எனவே, மதுக் கடை திறக்க அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

மதுக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி காமராஜா் மணிமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக் குழு நிா்வாகியும், சுசி கம்யூனிஸ்ட் செயலருமான லெனின் துரை, பாா்த்திபன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக் கடை முன் திரண்டு முழக்கங்களை எழுப்பினா். அங்கு வந்த போலீஸாா், ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி அவா்களை அப்புறப்படுத்த முயன்றனா்.

இதனால் அங்கிருந்தவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பலா் திரண்டு சாலையோரம் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். போலீஸாா் அவா்களை சமரசம் செய்து ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு அனுப்பினா்.

பாமக மாநில அமைப்பாளா் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், ஏஐடியூசி பொதுச்செயலா் கே.சேதுசெல்வம், தமிழா் களம் அழகா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT