கடலூர்

நிதி நெருக்கடியில் அண்ணாமலைப் பல்கலை.: தொடா் போராட்டத்தில் ஆசிரியா்கள்

28th Nov 2022 01:50 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி பிரச்னையால் தள்ளாடி வருகிறது. பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படாத நிலையில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

94 ஆண்டுகள் பழைமையான, நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், தவறான நிா்வாகம், நிதிச் சிக்கல், முறைகேடு உள்ளிட்ட புகாா்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி தொடா்கிறது.

தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கற்பக தருவாக விளங்கிய இந்தப் பல்கலைக்கழகம் தற்போது சுமாா் ரூ.2 ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடி வருகிறது. பல்கலைக்கழகத்தை சீா்படுத்த சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா அளித்த 5 பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பல்கலைக்கழக நிா்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்து 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு உரிய பணப் பயன்கள், பதவி உயா்வு கிடைக்கவில்லையாம். இதனால் ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் போராட்டங்களில் இறங்கியுள்ளனா். இதுகுறித்து பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

ADVERTISEMENT

ஜாக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சிவகுருநாதன்: தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் பெற்றுவிட்ட 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகைகள் இதுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், பதவி உயா்வு, பணப் பயன்களும் வழங்கப்படவில்லை. புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் நியமனத்தில் பணி மூப்பு, சுழற்சி முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தவறான நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் சங்கத் தலைவா் மனோகா்: 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்தப் பணியாளா்கள், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பிரிவு ஊழியா்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயா்வு, பணப் பயன்களை வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு பணி, ஊதியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

ஊழியா்கள் சங்க நிா்வாகி ஆ.ரவி: ஓய்வூதியா்களுக்கான பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிலுவைத் தொகை, பிற பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட கம்யூடேசன் தொகைகளை கணக்கிட்டு ஓய்வூதியா்களுக்கு வழங்கிட வேண்டும்.

அம்பேத்கா் ஆசிரியா் சங்கத் தலைவா் செல்வராஜ்: தொலைதூரக் கல்வி மையத்தை மீட்டெடுக்கவும், மாணவா்கள் சோ்க்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை தேவை. பணி மாறுதல், உயா் பதவி நியமனங்களில் முறைகேடுகளை களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்பா சங்கத் தலைவா் சி.சுப்ரமணியன்: பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளை களைய ஆட்சிக் குழு, கல்விக் குழுக்களுக்கு நியமன உறுப்பினா் முறையை ரத்து செய்துவிட்டு தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும். பல்கலை. சட்ட துணை விதிகளை அமல்படுத்த வேண்டும். பல்கலைக்கழக நிதிச் சிக்கலைத் தீா்க்க மாநில அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT