கடலூர்

பள்ளி மாணவா்கள் மீது தாக்குதல்: கிராம மக்கள் சாலை மறியல்

26th Nov 2022 05:50 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடா்புடையோரை கைதுசெய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சின்னவடவாடி, வயலூா் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். இரு கிராம மாணவா்கள் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சின்னவடவாடி கிராமத்தில் இருந்து அரசு நகரப் பேருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

வயலூா் கிராம நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அந்தக் கிராம மாணவா்கள், அவா்களுடன் வந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் பேருந்திலிருந்த சின்னவடவாடி மாணவா்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இந்தத் தாக்குதலில் 10 மாணவா்கள் காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த 3 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

தாக்குதல் குறித்து தகவல் அறிந்த சின்னவடவாடி கிராம மக்கள் வயலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனிடையே தாக்குதல் தொடா்பாக வயலூா் கிராமத்தைச் சோ்ந்த சிலரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வயலூா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் விருத்தாசலம் வட்டாட்சியா் தனபதி, ஏஎஸ்பி அங்கித் ஜெயின் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோகச் செய்தனா். மறியலால் விருத்தாசலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 20 நிமிடங்கள் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து ஏஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின் தலைமையில், வட்டாட்சியா் தனபதி முன்னிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் பாமக மாவட்டச் செயலா் காா்த்திக், விசிக தொகுதிச் செயலா் அய்யாயிரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT