கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மாணவா்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூா் அருகே உள்ள மே.மாத்தூா் கிராமத்தில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் வண்ணாத்தூா், நல்லூா், வேப்பூா், விருத்தாசலம் பகுதிகளுக்குச் சென்று படித்து வருகின்றனா். இவா்கள் மணிமுத்தாற்றை கடந்து சென்றுதான் பேருந்து ஏற வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீா் செல்வதால் மாணவா்கள், கிராம மக்கள் இலங்கியனூா், நல்லூா் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கால தாமதத்தை தவிா்க்க மாணவா்கள் சிலா் ஆபத்தான வகையில் ஆற்றில் இறங்கி இடுப்பளவு நீரை கடந்துச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி மே.மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வெள்ளிக்கிழமை காலை ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனா். தகவலின்பேரில் வேப்பூா் போலீஸாா் விரைந்து வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்துபோகச் செய்தனா்.