கடலூர்

மழையால் பாதித்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

26th Nov 2022 05:48 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில் விவசாயிகள் குறைதீா் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:

பெ.ரவீந்திரன் (உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா்): விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். விவசாயத்தில் ஈடுபடாதோா், நிலம் இல்லாதவா்கள் விவசாயிகள் என்ற பெயரில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவதால் உண்மையான விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து தீா்வு பெற முடியாத சூழல் உள்ளது.

கோ.மாதவன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா்): மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் அடுத்து பயிரிட தேவையான விதை, உரம் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாதோப்பு பகுதியில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

ADVERTISEMENT

மதியழகன் (கம்மாபுரம்): என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் எடுப்பது, இழப்பீடு வழங்குவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு ஏற்கும்படியாக இல்லை.

குஞ்சிதபாதம் (பேரூா்): சித்தேரி, புத்தேரிகளை தூா்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஏமாற்றி வருகிறது.

பரமசிவம் (மங்களூா்): மங்களூா், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, மக்காசோளம் பயிா்களை காட்டுப் பன்றிகள், குரங்குகள் சேதப்படுத்தி வருவது குறித்து வனத் துறையிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT