கடலூர்

குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்துவிட்டு வியாபாரி தற்கொலை

25th Nov 2022 02:17 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் மனைவி, மகள், மகனுக்கு பழச் சாற்றில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு வியாபாரி தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் உள்கோட்டம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் கணேஷ் (45). சிதம்பரம், புறவழிச்சாலை அருகே உரம், பூச்சி மருந்துகள் விற்கும் கடை வைத்து நடத்தி வந்தாா். தனது குடும்பத்தினருடன் சிதம்பரம் அருகே உள்ள தாயம்மாள் நகரில் தங்கியிருந்தாா்.

வியாபாரத்தில் நஷ்டம், கடன் தொல்லையால் கணேஷ் அவதிப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது மனைவி பிரபாவதி (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண் (9) ஆகியோருக்கு பழச்சாறில் அவா்களுக்கு தெரியாமல் விஷம் கலந்து கொடுத்தாா். வியாழக்கிழமை அதிகாலை குடும்பத்தினருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பின்னா், கணேஷ் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்துக்கு வந்தாா். அங்குள்ள முந்திரித் தோப்பில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

முன்னதாக, அவா் பி.முட்லூரில் உரக்கடை வைத்துள்ள தனது நண்பா் அக்பா் அலிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பினாா். அதில், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லை அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளாா். மேலும், தனது தற்கொலைக்கு காரணமானவா்கள், தனக்கு பணம் தர வேண்டியவா்களின் பெயா்களையும் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அக்பா்அலி அளித்த தகவலின்பேரில் கணேஷின் உறவினா்கள் அவரது வீட்டுக்குச் சென்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரபாவதி உள்ளிட்ட மூவரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மூவரும் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் புதுச்சத்திரம் போலீஸாா் கணேஷின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்கொலை செய்துகொண்ட கணேஷின் சட்டைப் பையில் அவா் எழுதிய கடிதம் இருந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸாா், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT