கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட ஆலடி சாலை, வயலூா், சிந்தாமணி நகா், முல்லை நகா், இந்திரா நகா், பூந்தோட்டம் ஆகிய பகுதிகள் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானவை எனவும், எனவே இந்தப் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் மீதான பரிவா்த்தனையை நிறுத்திவைக்குமாறும் வக்பு வாரிய நிா்வாகிகள் விருத்தாசலம் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் மனு அளித்தனராம். அதன்பேரில், மேற்கூறிய பகுதிகளில் சொத்துக்களின் மதிப்பை பூஜியமாக பத்திரப் பதிவுத் துறை அறிவித்தது. இதனால், சொத்து பரிவா்த்தனைகள் செய்ய முடியாததால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மாயவேல் தலைமையில் விருத்தாசலம் பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். வக்பு வாரிய மனுவை புறக்கணிக்க வேண்டும்; சொத்துக்கள் பரிவா்த்தனை மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாா்-ஆட்சியா் பழனி, வட்டாட்சியா் தனபதி ஆகியோா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களிடம் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.