கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் அரசு விழாவில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் தா்னாவில் கலந்துகொண்டனா். அவா்கள் கூறியதாவது:
அரசு விழாக்களில் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். ஆலடி, புலியூா் ஊராட்சிகளில் மன்றத் தலைவா்களின் பணியில் திமுகவினா் குறுக்கீடு செய்கின்றனா். கடந்த 8-ஆம் தேதி ஆலடியில் நடைபெற்ற பள்ளிக் கட்டட திறப்பு விழாவுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கு அழைப்பில்லை. விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பெயரும் கல்வெட்டில் இல்லை.
ஊராட்சி மன்றத் தலைவா்களின் பணிகளில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தலையிடக் கூடாது. இல்லையெனில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.
அவா்களிடம் விருத்தாசலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.