கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலைப் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தினா்.
பண்ருட்டியில் இருந்து கோலியனூா் செல்லும் வழியில் பூங்குணம், எல்.என்.புரம் ஆகிய இடங்களில் இந்தச் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. எல்.எல்.புரம், வேதாந்தம் நகரைச் சோ்ந்த சபாபதி (55) என்பவா் திங்கள்கிழமை இந்தச் சாலையில் பைக்கில் சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.