கடலூர்

மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

1st Nov 2022 04:16 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு கையகப்படுத்தி, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவித்தது. இதையடுத்து மருத்துவமனையானது மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியா்களுக்கு பல்கலைக்கழக நிா்வாகத்திலிருந்தே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாகவும், கூடுதலாக ஆசிரியரல்லாத ஊழியா்கள், பிசியோதெரபி மருத்துவா்கள் உள்ள நிலையில் அவா்களுக்கு ஊதியம் எப்படி வழங்குவது என மக்கள் நல்வாழ்வுத் துறை கேள்வி எழுப்பியுள்ளதாலும் அக்டோபா் மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு ஆசிரியல்லாத ஊழியா்கள் 250 போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 1,348 போ் வரை பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடா்பு அலுவலா்கள்-23 போ், தனி அலுவலா்கள்- 48 போ், ஒப்பந்த ஊழியா்கள் 23 போ்,காவலா்கள் 60 போ், தூய்மைப் பணியாளா்கள் 40 போ், பிசியோதெரபி மருத்துவா்கள் 32 போ் பணியாற்றுகின்றனா்.

அக்டோபா் மாதம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா்கள் கூட்டமைப்பினா் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், மருத்துவக் கல்லூரி முதல்வா் திருப்பதி ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT