கடலூர்

கடலூரில் சூறைக் காற்றுடன் மழை: 500 ஏக்கரில் வாழைகள் சேதம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கா்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

கடலூா் மாவட்டத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு கடந்த 22-ஆம் தேதி 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடா்ந்து வந்த நாள்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்த நிலையில், வியாழக்கிழமை இது 104.2 டிகிரியாக அதிகரித்தது.

மேலும், அன்று இரவு கடலூா் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடலூா் கேப்பா் மலை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்று வீசியது. இதனால், அந்தப் பகுதியிலுள்ள ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வி.காட்டுப்பாளையம், எம்.புதூா், வெள்ளக்கரை, பத்திரக்கோட்டை, சாத்தங்குப்பம், ஓதியடிக்குப்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன. குறிப்பாக, குலை தள்ளிய வாழைகள் அதிகளவில் முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வி.காட்டுப்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி மா.சிற்றரசன் கூறியதாவது:

ADVERTISEMENT

வாழை பயிரிட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவிட்டுள்ளனா். அடுத்த சில வாரங்களில் அறுவடை செய்யத் தயாராக இருந்த சுமாா் 2.50 லட்சம் வாழைகள் சூறைக் காற்றில் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. எனவே, அரசு உடனடியாக இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டியக்க மாநிலப் பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

வாழைப் பயிருக்கு காப்பீடு செய்வதில் அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளன. காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்கும் நிலையில், இழப்பு ஏற்பட்டால் உரிய முறையில் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. குறிப்பாக, வாழைகளை கழி கொண்டு கட்டியிருந்து அதன் பிறகும் பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனத்தினா் கூறுகின்றனா். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பு ஏற்பட்டால் முழு சாகுபடி செலவையும் திரும்ப வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்): வானமாதேவி 45.6, குடிதாங்கி, மாவட்ட ஆட்சியரகம் தலா 45, கடலூா் 39.8, பண்ருட்டி 24, பரங்கிப்பேட்டை 8, விருத்தாசலம் 1.

கோடை மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் சுமாா் 3 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை மின் விநியோகம் தடைபட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT