கடலூர்

குறுவை நெல் சாகுபடி பணி தீவிரம்

24th May 2022 11:20 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியானது காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இங்கு கீழணை நீரை பயன்படுத்தி சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் வடவாறு வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவை மூலம் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு, மேட்டூா் அணை வரலாற்றில் மிக அரிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (மே 24) தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதனால் நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து பெரியபுங்கநதி கிராம விவசாயி அன்பழகன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்பவா்களே பெரும்பாலும் குறுவை நெல் சாகுபடி செய்தனா். ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை முன்னரே திறக்கப்பட்டுள்ளதால் குறுவை நெல் சாகுபடி பணிகளை அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தொடங்கியுள்ளனா். சில இடங்களில் நடவு பணி நடைபெறுகிறது. ஆனால், தற்போது உர மூட்டைகளின் விலை மிக அதிகமாக உள்ளதால் விவசாயிகள் நெருக்கடியை சந்திக்கின்றனா். எனவே, கடந்த ஆண்டைப்போல நிகழாண்டும் தமிழக அரசு விவசாயிகளுக்கு உர மூட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT