கடலூர்

கட​லூா் மாவட்​டத்​தில் 351 விைசப்​ப​ட​கு​கள் ஆய்வு

20th May 2022 12:38 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் 351 விசைப்படகுகளை 25 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் புதன், வியாழக்கிழமைகளில் ஆய்வு செய்தனா்.

மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலூா் மாவட்டம் உள்பட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு கடலில் மீன் பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக் காலத்தில் அனைத்துவகை மீன் பிடி விசைப் படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, படகின் உறுதித்தன்மை, இயந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீளம், அகலம் ஆகியவை பதிவுச் சான்றுடன் சரிபாா்க்கப்பட்டு, அதனடிப்படையில் மானிய விலையிலான எரியெண்ணெய், இதர மானியத் திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, நிகழாண்டுக்கான ஆய்வு கடலூா் மாவட்டத்தில் கடலூா் துறைமுகம், அன்னங்கோயில், முடசல் ஓடை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை தொடங்கி இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபடுவதற்காக, தருமபுரி மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநா் இளம்வழுதி தலைமையில், 3 துணை இயக்குநா்கள் மற்றும் 25 அலுவலா்கள் வந்திருந்தனா். இவா்கள் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 3 பகுதிகளிலும் உள்ள படகுகளை ஆய்வு செய்தனா். இந்தப் பணிகளை கடலூா் மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியன், துணை இயக்குநா் வேல்முருகன் ஆகியோா் ஒருங்கிணைத்தாா்.

இதுகுறித்து துணை இயக்குநா் வேல்முருகன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 310 விசைப்படகுகளில் படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலைத்தொடா்பு கருவிகள், படகின் வா்ணம், நீளம், அகலம், இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 35 படகுகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டது. பதிவு செய்யப்படாமல் இருந்த 12 படகுகளை பதிவு செய்திட நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT