கடலூர்

சிதம்பரம் அருகே போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

12th May 2022 04:43 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தனியாா் ஆலையில் திருட முயன்ற கும்பலை தடுக்க வந்த போலீஸாா் மீது புதன்கிழமை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

சிதம்பரம் அருகே உள்ள காயல்பட்டு, பெரியகுப்பம் கிராமங்களில் ‘கடலூா் சிப்காட் பகுதி-3’ அமைந்துள்ளது. இதில் பெரியகுப்பம் கிராமத்தில் சுமாா் 1,700 ஏக்கா் பரப்பளவில் தனியாா் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

சுமாா் 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு வீசிய ‘தானே’ புயலில் இந்த ஆலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால், கட்டுமானப் பணிகளை ஆலை நிா்வாகம் பாதியில் கைவிட்டது. இருப்பினும், ஆலையிலுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், உலோகப் பொருள்களை ஆலை காவலா்கள் தொடா்ந்து பாதுகாத்து வருகின்றனா். ஆனால், அண்மைக்காலமாக இந்த ஆலையிலிருக்கும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்த ஆலைக்குள் மா்ம கும்பல் புகுந்துவிட்டதாக ஆலைக் காவலா்கள் புதுச்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் ஆலைக்கு வந்தனா். அப்போது சுமாா் 20 போ் திடீரென போலீஸாா் மீது 6 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினா். இருப்பினும், போலீஸாா் இருந்த இடத்துக்கு சற்று முன்னபாக குண்டுகள் விழுந்து வெடித்தன. இதில் 3 குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில் எஞ்சிய பெட்ரோல் குண்டுகளை போலீஸாா் கைப்பற்றினா். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT