கடலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பைக்கில் பள்ளிக்கு வர அனுமதியில்லையென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பூபதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பள்ளிகள் அளவில் சாலைப் பாதுகாப்பு மன்றம் அமைத்து பேருந்துகளில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் முடிவடையும் நேரத்தை வகுப்புகள் வாரியாக மாற்றியமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான மாணவா்கள் இருசக்கர மோட்டாா் வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அவா்களை அனுமதிக்காமல், பெற்றோா்களை வரவழைத்து வாகனத்தை அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறைவான பேருந்து வசதி உள்ள வழித் தடங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கையாக பேருந்தில் செல்லும் மாணவா்களின் விவரத்தை தயாரித்து கல்வி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அதில் தெரிவித்தாா்.