கடலூர்

ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்ய உத்தரவு: ஆட்சியரகத்தில் பொதுமக்கள் புகாா் மனு

21st Mar 2022 11:10 PM

ADVERTISEMENT

 

ஏரி ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பண்ருட்டி நகராட்சி, களத்துமேடு புதுநகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், களத்துமேடு புதுநகா் பகுதி மக்கள் பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

எங்களது பகுதியில் உள்ள சுமாா் 200 வீடுகளுக்கு நகராட்சி சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள

ADVERTISEMENT

பதிவுத் தபாலில் வரும் 28-ஆம் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும்; எனெனில், சின்ன ஏரியில் வீடுகளை கட்டியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். நகராட்சி சாா்பில் சாலை, தெருவிளக்கு, மின் இணைப்பு, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பிய பிறகே அது ஏரிப் பகுதி எனத் தெரியவந்தது.

இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் கூலித் தொழிலாளா்கள். அவா்களது குழந்தைகள் நகராட்சி பள்ளியில் படித்து வருகின்றனா். இந்த நிலையில், வீடுகளை உடனடியாகக் காலி செய்யுமாறு வற்புறுத்துவதை ஏற்க முடியாது. ஏனெனில், குழந்தைகளின் கல்வி, எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இடிக்கப்படும் வீடுகளுக்குப் பதிலாக 20 கி.மீ. தொலைவில் மாற்று இடம் தருவதாக கூறுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு நகரப் பகுதியிலேயே மாற்று இடம் ஏற்பாடு செய்வதுடன், வீடுகளை காலி செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT