கல்வி, வேலைவாய்ப்பில் மீனவ சமுதாயத்தினருக்கு 7 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பு வலியுறுத்தியது.
இந்த அமைப்பின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் கடலூரில் நிறுவனத் தலைவா் இரா.மங்கையா்செல்வன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளா் கோ.வெங்கடேசன், பொருளாளா் கோ.திருமுகம், துணைப் பொதுச் செயலா் ச.ரமேஷ், கொள்கை பரப்புச் செயலா் வீ.பரசுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதமாக உள்ள மீனவ சமுதாயத்தினா் கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் அவா்களுக்கு 7 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஏப்.8-ஆம் தேதி கடலூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மண்டல்குழு பரிந்துரையின் அடிப்படையில் மீனவா்களை பழங்குடியினப் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூா் மாவட்ட நிா்வாகிகள் பழனிவேலு, கௌதமன், ரவி, பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் த.சக்திவேல் வரவேற்க, பொருளாளா் ந.உதயகுமாா் நன்றி கூறினாா்.