கடலூர்

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

10th Mar 2022 11:53 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 110 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை திருடுபோனது.

விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை. விருத்தாசலத்திலுள்ள அரசு முந்திரி ஆராய்ச்சிப் பண்ணையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தாா். இவரது மனைவி தனலட்சுமி (60). இவா்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா்களில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், 3-ஆவது மகள் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். தனலட்சுமி தனது மகன் விக்னேஷுடன் இணைந்து முந்திரி விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தனலட்சுமி தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாயப் பணிக்குச் சென்றாா். பிற்பகலில் திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பீரோவில் 3-ஆவது மகளின் திருமணத்துக்காகவும், மற்ற மகள்களுடையது என மொத்தம் 110 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த நிலையில் அவையனைத்தும் திருடுபோனது தெரியவந்தது. மேலும், முந்திரிக் கொட்டைகள் விற்ற பணம் ரூ.2 லட்சமும் திருடுபோனது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT