கடலூா்: கடலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்நீத்து பின்னா் உயிா்த்தெழுந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவா்கள் தொடா்ந்து 40 நாள்கள் உபவாசமிருந்து ஜெபிப்பது வழக்கம். இந்த 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலம் என்று கூறுகின்றனா். இந்த ஆண்டுக்கான தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் புனித நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.
இதையொட்டி மஞ்சக்குப்பம் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னா், கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவா்களின் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்குத்தந்தை பூசி ஆசிா்வாதம் செய்தாா்.
இதேபோல, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி ஆலயம், காா்மேல் அன்னை ஆலயம் உள்பட பல ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலிகள் நடைபெற்றன.