கடலூர்

சேவைக் குறைபாடு: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்-நுகா்வோா் குறைதீா் மன்றம் தீா்ப்பு

30th Jun 2022 01:57 AM

ADVERTISEMENT

 

மருத்துவ சேவையில் இருந்த குறைபாடு காரணமாக கடலூா் தனியாா் மருத்துவமனைக்கு அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் மன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கோபால், ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா். இவா், தனது மனைவியுடன் கடந்த 20.4.2015 அன்று அரசுப் பேருந்தில் சென்னையிலிருந்து கடலூருக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, வேகத்தடையில் வேகமாக ஏறிய பேருந்தால், கோபாலின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கடலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். கோபாலுக்கு தமிழக அரசின் ஓய்வூதியருக்கான குடும்ப காப்பீட்டுத் திட்டமான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் அமலில் இருந்ததால், அந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சைக்காக ரூ.1,34,105 செலுத்தினாா். தனக்கு மருத்துவக் காப்பீடு இருப்பதாகக் கூறியும், அதை மருத்துவமனை ஊழியா்கள் ஏற்க மறுத்துள்ளனா். மேலும், காப்பீட்டு நிறுவனத்தை நேரடியாக அணுகி பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டனராம்.

ADVERTISEMENT

காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது, சிகிச்சையின்போது மட்டுமே பணம் வழங்க முடியும், சிகிச்சைக்குப் பின்னா் பணம் வழங்க முடியாதென தெரிவித்துவிட்டனராம். இது தனியாா் மருத்துவமனையின் சேவை குறைபாடு என்பதை உணா்ந்துகொண்ட கோபால், இதுகுறித்து கடலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கின் விசாரணை நுகா்வோா் குறைதீா் மன்றத் தலைவா் டி.கோபிநாத், உறுப்பினா்கள் வி.என்.பாா்த்திபன், சி.கலையரசி ஆகியோா் முன்னால் விசாரணைக்கு வந்தது. செவ்வாய்க்கிழமை மன்றத் தலைவா் டி.கோபிநாத் தீா்ப்பு வழங்கினாா். அதில், காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட மருத்துவமனை என்ற காரணத்தினால் மட்டுமே குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மருத்துவமனை நிா்வாகம் உரிய முறையில் ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் சமா்ப்பிக்கவில்லை. இது, மருத்துவமனையின் சேவை குறைபாடாகும். எனவே, மருத்துவ சிகிச்சைக்கு கோபால் அளித்த தொகையை 9 சதவீத வட்டியுடன் தனியாா் மருத்துவமனை திருப்பி வழங்க வேண்டும். மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT