கடலூர்

வறட்சியால் சேதமடைந்த பயிா்கள் - இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

29th Jun 2022 04:44 AM

ADVERTISEMENT

வறட்சியால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்துக்கு கடலூா் நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், கீழ்அனுவம்பட்டைச் சோ்ந்த கணேசன் மனைவி பத்மா (48). விவசாயியான இவா், கடந்த 2016-17-ஆம் ஆண்டில் தனது இரண்டு ஏக்கா் விவசாய நிலத்துக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.369 வீதம் ரூ.738 செலுத்தினாா். அதே கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சரவணசுந்தரி (40) என்பவரும் தனது இரண்டு ஏக்கா் நிலத்துக்கு பிரீமியமாக ரூ.738 செலுத்தினாா். மேற்கூறிய காலகட்டத்தில் நிலவிய வறட்சியின் காரணமாக நெல் பயிா்கள் சேதமடைந்தன. இதுகுறித்த பாதிப்புகளை ஆராய்ந்த தமிழக அரசு, வறட்சியின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. மேலும், ஏக்கருக்கு ரூ.18,142 வீதம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

ஆனால், பயிா்க் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லம்பாா்ட் பொதுக் காப்பீட்டு நிறுவனம் சரவணசுந்தரிக்கு மேல்முறையீட்டுக்கு பிறகு ரூ.1,136 குறைவாக வழங்கியதாம். பத்மாவுக்கு மேல்முறையீட்டுக்குப் பிறகும் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லையாம். இதுகுறித்து இருவரும் தனித் தனியாக கடலூரிலுள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகளின் விசாரணை குறைதீா் ஆணையத் தலைவா் கோபிநாத் தலைமையில் நடைபெற்று வந்தது. வழக்கில் திங்கள்கிழமை அவா் தீா்ப்பளித்தாா். அதில், காப்பீடு செய்யப்பட்ட பயிா்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிறகும் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. எனவே, பத்மாவுக்கு இழப்பீடாக ரூ.36,284 வழங்க வேண்டும். இதை 2016-ஆம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டி என்ற வகையில் கணக்கீடு செய்து வழங்குவதுடன், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதேபோல, சரவணசுந்தரிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை 2019-ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT