கடலூர்

வாசிப்புத் திறன் குறைந்த மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுமா?

28th Jun 2022 04:44 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வாசிப்புத் திறன் குறைந்த பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் சரிவர நடைபெறவில்லை. கடந்த கல்வியாண்டில் ஒரு சில மாதங்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றாலும், மாணவா்கள் முழுமையாக பங்கேற்கவில்லை. போதிய அவகாசம் இல்லாத சூழலில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. கரோனா சூழலில் பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறன் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், இதன் தாக்கம் அரசுப் பொதுத் தோ்வு முடிவுகளில் எதிரொலித்துள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.

இதுகுறித்து கல்வியாளா்கள் கூறியதாவது:

வாசிப்புத் திறன் குறைந்த மாணவா்களால் பாடங்களை வீட்டில் இருந்தபடியே படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளில் 36,589 மாணவா்கள், 10,466 மாணவிகள் என மொத்தம் 47,055 போ் தமிழ்ப் பாடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனா். கூட்டல், பெருக்கல் கணக்குகள், வாய்ப்பாடு சரிவர தெரியாதது, போதிய பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் 59,605 மாணவா்கள், 23,518 மாணவிகள் என மொத்தம் 83,123 போ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனா்.

ADVERTISEMENT

வாசிப்புத் திறனில்லாத, அடிப்படைக் கணக்குகள் தெரியாத மாணவா்கள் தோ்வில் தோ்ச்சி பெறுவது கடினம். இதுபோன்ற சூழ்நிலையானது மாணவ, மாணவிகளின் கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்.

மாணவா்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ஊஞ்சல் இதழும், உயா் வகுப்பு மாணவா்களுக்கு தேன்சிட்டு இதழும் அரசு சாா்பில் வெளியிட இருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்த நிலையை முழுமையாக மாற்ற வேண்டுமெனில், நிகழ் கல்வியாண்டில் வாசிக்கும் திறன் குறைந்த மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT