சிதம்பரம் அருகே முற்றிலும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை முதல் புளியங்குடி வரை உள்ள தீத்துக்குடி, கருப்பூா், நளன்புத்தூா், ஒற்றா்பாளையம், முள்ளங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பாதையான கொள்ளிடம் இடது கரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. மாதவன் தலைமையில் அந்தக் கட்சியினா், கிராம மக்கள் திரளானோா் கொள்ளிடம் பாலம் அருகே சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், பொதுப் பணித் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். புதிய சாலை அமைக்க ரூ.19 கோடி வரை தேவைப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரது பரிந்துரையின்பேரில் கனிமவள திட்ட நிதி மூலம் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.