கடலூர்

நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்

24th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாகத் திறக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:

மேல்புளியங்குடி எம்.செல்வராஜ்: ஸ்ரீமுஷ்ணம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 13 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியைச் சோ்ந்த சுமாா் 9 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இதனால், வங்கி சேவை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த வங்கியை 3 கிளைகளாக பிரிக்க வேண்டும்.

கம்மாபுரம் செந்தில்முருகன்: விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் யூரியா உரத் தட்டுப்பாடு நிலவுகிறது.

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி குமரகுரு: தற்போது நெல் பயிா்கள் அறுவடை பருவத்துக்கு வந்துள்ளதால், தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் பெ.ரவீந்திரன்: உணவு உற்பத்தியில் கடலூா் மாவட்டம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தாலும், உணவுப் பாதுகாப்பில் பின்தங்கியுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள மாற்றுப்பயிா் திட்டம் தொடா்பாக விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். எம்ஆா்கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்காக பதிவு செய்யப்பட்ட கரும்புகளை தனி நபா்கள் சிலா் வெளிமாவட்டத்தில் உள்ள ஆலைக்கு முறைகேடாக வெட்டி அனுப்புவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூா் குஞ்சிதபாதம்: நீா்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி மறுக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதற்கு ஆட்சியா், உரிய அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:

சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்து, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். நந்தன் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க ஆலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கை சரிசெய்யப்படும். பூச்சி மருந்து, உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறேன் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT